மிளகு
Piper nigrum · Black pepper
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது. மிளகின் வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம். தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், கன்னடம்:மெனசு (menasu, ಮೆಣಸು) மலையாளம்: குறு மிளகு(Kuru Mulagu) தெலுங்கு: மிரியாலு அல்லது மிரியம் (miriyam, మిరియం) கொங்கணி: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது. மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதால், தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை மிளகு, CC BY-SA 4.0.